மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களான ஷேன் நிகம், நீரஜ் மாதவ் மற்றும் ஆண்டனி வர்கீஸ் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் ‘ஆர் டி எக்ஸ்’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது. அத்துடன் இந்த படம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 25 ஆம் தேதியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அறிமுக இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் ‘ஆர் டி எக்ஸ்’. இதில் ஷேன் நிகம், நீரஜ் மாதவ், ஆண்டனி வர்கீஸ், பாபு ஆண்டனி, லால், ஐமா ரோஸ்மி செபாஸ்டியன், பைஜு சந்தோஷ், மகிமா நம்பியார், மாலா பார்வதி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் கதையை இயக்குநர் நஹாஸ் ஹிதாயத், சபாஷ் ரஷீத் மற்றும் ஆகாஷ் சுகுமாரன் ஆகியோர் இணைந்து எழுதி இருக்கிறார்கள். அலெக்ஸ் ஜே. புலிக்கல் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார். தற்காப்பு கலைகளை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு தேசிய விருது பெற்ற சண்டை பயிற்சி இயக்குநர்களான அன்பறிவ் அதிரடியான சண்டை காட்சிகளை அமைத்திருக்கிறார்கள். சமன் சாக்கோ படத்தொகுப்பு பணிகளை கவனிக்க கலை இயக்கத்தை ஜோசப் நெல்லிக்கல் மேற்கொண்டிருக்கிறார். ஆக்சன் என்டர்டெய்னர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வீக்கெண்ட் பிளாக்பஸ்டர்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சோபியா பால் தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் நட்சத்திரங்களின் கதாபாத்திர தோற்றம் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டிருந்ததால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.