மீண்டும் பாக்யா/bhakyaraj/bhakya

திரைக்குப் பின்னால், திரைக்கு முன்னால் என சினிமாவின் டபுள் ட்ராக்கிலும் செம கெத்து காட்டியவர்; காட்டுபவர் இயக்குநர் கே.பாக்யராஜ். திரைக்கதையின் பிதாமகராக கொண்டாடப்படுபவர். நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், வசனகர்த்தா, கதாசிரியர், இசையமைப்பாளர், பத்திரிகையாளர் என பன்முகமாக ஜொலிப்பவர். தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவராகவும் அசத்துபவர். சினிமாக்காரர்களில் ‘பாக்யா’ என்ற பெயரில் சொந்தமாக பத்திரிகை ஒன்றைத் தொடங்கி, கொஞ்சமும் சோர்வடையாமல் நடத்தி 32 ஆண்டுகளாக அனைவரின் பேராதரவுடன் உச்சத்தில் இருந்த பாக்யா இதழ் உலகமே சந்தித்த கொரோனா தொற்று காரணமாக முடக்கப்பட்டது.

லாக்டோனில் கல்வி முதல், காய்கறிகள் வரை அதிகமாக ஆன்லைனில் வர தொடங்கிய நிலையில் மக்கள் அனைவரும் டிஜிட்டல் உலகிற்கு மாற தொடங்கிவிட்டனர். செய்திதால் முதல் புத்தகங்கள் வரை அனைத்தும் பிரின்ட் செய்து வெளியிட்ட காலங்கள் மாறி, வீட்டில் அமர்ந்தபடி ஆன்லைன் மூலம் கையில்யுள்ள செல்போனில் டிஜிட்டல் யுகத்திற்கு மாறிவிட்டனர்.

இதனால் பாக்யா டிஜிட்டல் முறையில் மீண்டும் ரசிகர்களை ஈர்க்க வருகிறது. வார இதழாக வந்துகொண்டிருந்த பாக்யா தற்போது டிஜிட்டலில் தினம் தோறும் செய்திகளாக வெளிவரவுள்ளது. நாளை – ஜூன் மாதம் 25 ஆம் தேதி (25:06:2023) துவங்குகிறது. பாக்யா வாசகர்கள் அனைவரும் அவர்களின் சிறு கதைகள், ஜோக்ஸ், தொகுப்புகள், கவிதைகள் அனைத்தும் ஆன்லைன் மூலம் பகிரலாம் என்று ஆசிரியர் பாக்யராஜ் அவர்கள் தனது யூடியூப் சேனல் மூலம் தெரிவித்துள்ளார். மிகப்பெரிய இடைவெளிக்கு பிறகு வருகிற 25 ஆம் தேதி பாக்யா வாசகர்களை சந்திப்பத்தில் தனக்கு மிக மிக மகிழ்ச்சி அப்படீன்னும் தெரிவிச்சிருக்கார்.

இச்சூழலில் பாக்யா இதழ் ஆரம்பிச்ச காலச் சூழல் குறித்துக் கேட்டப் போது, “‘இது நம்ம ஆளு’ ஆகஸ்ட்ல ரிலீஸ் ஆகுது. நான் ஜூன்லயே (ஜூன் 2, 1988) ‘பாக்யா’வை கொண்டு வந்துட்டேன்…’’ மலரும் நினைவுகளுடன் சிலிர்ர்த கே.பாக்யராஜின் ‘பாக்யா’ பயணம் இன்னும் சுவாரஸ்யமானது.

‘‘‘புதிய வார்ப்புகள்’ல ஒர்க் பண்ணும்போதே, சொந்தமா பத்திரிகை ஆரம்பிக்கற ஐடியா வந்துடுச்சு. அதை முன்னெடுக்கும்போது ஏகப்பட்ட எதிர்ப்புகள். ஆனா ‘சினிமா ஆட்கள் பத்திரிகை ஆரம்பிச்சா சரியா வருமா’னு பேசினாங்க. அதுக்கு உதாரணமா சறுக்கலை சந்திச்ச சிலரை குறிப்பிட்டுச் சொன்னாங்க. ‘சினிமாக்காரங்க ஆஹா ஓஹோனு ஆரம்பிப்பாங்க. ஆரம்பிச்ச கொஞ்ச நாள்லயே ஸ்பீடு கம்மியாகும், அப்புறம் திடீர்னு பத்திரிகையை ஸ்டாப் பண்ணிடுவாங்க… அப்படிப்பட்ட நிலமை உங்களுக்கு வேணாம். நல்லா யோசிச்சுக்குங்க’னு பலரும் அட்வைஸ் பண்ணினாங்க. ஆனா, எனக்கு நம்பிக்கை இருந்துச்சு. ஏதோ ஒரு ஒளிக்கீற்று தெரிஞ்சது. அந்த நம்பிக்கைல தொடங்கினதுதான் ‘பாக்யா’. ஊர்ல என் நெருங்கிய நண்பர்கள் என்னை ‘பாக்யா’னு கூப்பிடுவாங்க. அந்தப் பெயரையே பத்திரிகைக்கும் வச்சிட்டேன்.

ஆரம்பத்துல விற்பனை ஏஜெண்டுகள் அமையல. ‘இவர் சினிமாக்காரர் ஆச்சே… செட் ஆவாரா’னு அவங்க யோசிச்சிருக்கலாம். அப்புறம், என் ரசிகர்கள் மன்றத்துல உள்ளவங்களையே ஏஜெண்ட்களாக்கிட்டேன். அவங்களுக்கு புக்குகளை அனுப்பி வச்சு, ‘யாரும் முன்பணம் கட்டத் தேவையில்ல. நீங்க வித்து காசை கொடுங்க’னு சொல்லிட்டேன். என்மேல உள்ள ப்ரியத்துல பரவலா கொண்டு சேர்த்துட்டாங்க.

வாசகர்களுக்கு ‘பாக்யா’வின் கன்டன்ட் பிடிச்சது. நேசிக்க ஆரம்பிச்சாங்க. சரியான டயத்துல பத்திரிகை வருதுனு தெரிஞ்சபிறகுதான் ரெகுலர் ஏஜெண்ட்கள் தேடி வந்தாங்க. சில மாசங்கள்லயே அசுரவேகம் பிடிச்சிடுச்சு. ஒன்றரை வருஷத்துக்குள்ள ஒண்ணேகால் லட்சத்துக்கு மேல சர்க்குலேஷன் ஏறிடுச்சு. எங்க வேகம், சர்க்குலேஷன் ஏறினதைப் பார்த்து கொஞ்சம் லேட்டா மார்க்கெட்டுக்கு வந்திட்டிருந்த பிரபல வார இதழ்கள் கூட ‘பாக்யா’வுக்கு முன்னாடியே வர்றா மாதிரி தேதிகளை மாத்தினாங்க…’’ அப்படின்னார்

‘பாக்யா’வின் ஸ்பெஷலான ‘கேள்வி பதில்’ பகுதி குறித்து கேட்டப் போது ‘‘நான் விரும்பிப் படிக்கற விஷயங்கள, படிச்சதுல சுவாரஸ் யமானதைத்தான் ‘பாக்யா’விலும் கொண்டு வந்தேன். நாவல், சிறுகதை, ஜோக்ஸ்னு ரெகுலர் விஷயங்களையும் வச்சேன். கேள்வி – பதில் பகுதி ஆரம்பிக்கும்போதுதான் கொஞ்சம் யோசிச்சேன். ‘குமுத’த்துல அரசு பதில்கள், ‘கல்கண்டு’ல லேனா தமிழ்வாணன் கேள்வி பதில்கள் வந்துட்டிருந்தது. அதிலிருந்து வேறுபட்டு பண்ண விரும்பினேன். கொஞ்சம் நீளமான பதில்களா இருந்தாலும் பரவாயில்லைனு ஒவ்வொண்ணுக்கும் குட்டிக்கதைகள் சொல்றா மாதிரி எழுத ஆரம்பிச்சேன்.

உங்க கேள்வி பதிலுக்காக நாங்க எல்லாம் வெயிட்டிங் சார்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *