ராம்சரண்- உபாசனா தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்தது

மெகா ஸ்டார் சிரஞ்சீவி குடும்பத்தினர் உற்சாகம்

திரையுலகினர்.. ரசிகர்கள்.. வாழ்த்து

தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான மெகா பவர் ஸ்டார் ராம்சரண் மற்றும் உபாசனா கொனிடேலா தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. இவர்களுக்கு தெலுங்கு திரையுலகினர் மட்டுமல்லாமல் இந்திய திரையுலகினரும் உலகமெங்கும் உள்ள ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். வாழ்த்துகளை தெரிவித்த அனைவருக்கும் ராம்சரண் -உபாசானா சார்பில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி தன் மனமார்ந்த நன்றியை தெரிவித்திருக்கிறார்.

மெகா பவர் ஸ்டார் ராம்சரண்- உபாசனா தம்பதியருக்கு இன்று ( ஜூன் 20) பெண் குழந்தை பிறந்திருக்கிறது. ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட திருமதி உபாசனா ராம்சரணுக்கு இன்று அதிகாலை பெண் குழந்தை பிறந்தது. இந்த நல்ல செய்தியால் மெகா ஸ்டார் குடும்பத்தினர், அவருடைய நண்பர்கள், நலம் விரும்பிகள், ரசிகர்கள் என அனைவரும் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள்.

இது தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனையின் டாக்டர் சுமனா மனோகர் பேசுகையில், ” இன்று அதிகாலை உபாசனாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை மற்றும் தாய் இருவரும் நலமாக உள்ளனர். அவர்கள் விரைவில் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவர். தற்போது டாக்டர் ரூமா சின்ஹா உபாசனாவை தொடர்ந்து பரிசோதித்து, ஆலோசனை வழங்கி வருகிறார்” என்றார்.

உபாசானாவிற்கு பேறு காலத்தின் போது ஊட்டச்சத்து தொடர்பான ஆலோசனைகளை வழங்கிய டாக்டர் லதா காஞ்சி பார்த்தசாரதி பேசுகையில், ” கர்ப்ப காலத்தில் உபாசனா தனது உணவு மற்றும் உடற்பயிற்சியில் அதிக கவனம் செலுத்தினார். அவருடைய அர்ப்பணிப்புடன் கூடிய செயல் காரணமாக பிரசவம் மிகவும் எளிதாக இருந்தது. உபாசனாவும், குழந்தையும் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளனர்” என்றார்.

மெகா ஸ்டார் சிரஞ்சீவி பேத்தி பிறந்த மகிழ்ச்சியை செய்தியாளர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

அதன் போது பேசிய மெகா ஸ்டார் சிரஞ்சீவி, ” ராம்சரண் – உபாசனா தம்பதியருக்கு இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 1:49க்கு மகள் பிறந்திருக்கிறார். எங்கள் குடும்பம் மகிழ்ச்சியில் உள்ளது. இந்த பெண் குழந்தை எங்களுக்கு மிகவும் முக்கியம்.

ராம்சரண் மற்றும் உபாசனாவை பெற்றோர்களாக காண நாங்கள் பல ஆண்டுகளாக காத்திருந்தோம். பல ஆண்டுகளுக்குப் பிறகு எங்களது வேண்டுகோளை இறைவன் நிறைவேற்றி வைத்திருக்கிறார்.

ராம் சரண் தந்தையானதும் எங்கள் நண்பர்களிடமிருந்தும், உலகெங்கிலும் உள்ள அவருடைய ரசிகர்கள், நலம் விரும்பிகள் என அனைவரும் அன்பையும், வாழ்த்தையும் பொழிந்து வருகிறார்கள். எங்களின் மகிழ்ச்சியை தங்களுடையதாக உணர்கிறார்கள். இவர்களுக்கு எங்கள் குடும்பத்தின் சார்பாக. வாழ்த்தியதற்கும், அன்பை பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

பெரியோர்களின் கூற்றுப்படி நல்ல நேரத்தில் குழந்தை பிறந்திருக்கிறது. பிறப்பதற்கும் முன்னே நல்ல அறிகுறிகளும் தென்பட்டன. தொழில்துறையில் ராம்சரண் அடைந்த வளர்ச்சி.. அவரது சாதனைகள்… வருண் தேஜின் நிச்சயதார்த்தம்.. என பல விசயங்களை குறிப்பிடலாம். கடந்த கால மகிழ்ச்சியான தருணங்களில் எங்கள் வாழ்வில் நல்ல விசயங்கள் நடந்திருக்கின்றன. இவை அனைத்திற்கும் பிறந்த பெண் கொண்டிருக்கும் நேர்நிலையான ஆற்றலே காரணம் என நான் உணர்கிறேன்.

எங்கள் குடும்பம் ஆஞ்சநேய சுவாமியை வழிபட்டு வருகிறது. செவ்வாய்க்கிழமை என்பது ஆஞ்சநேயருக்கு உகந்த நாள். மேலும் இந்த நல்ல நாளில் குழந்தை பிறந்ததற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாகவும் இருக்கிறோம்.

அப்பல்லோ மருத்துவமனையில் சிறந்த மருத்துவர்கள் குழு பிரசவத்தை குறைபாடற்ற முறையில் கையாண்டது. இதற்காக அனைவருக்கும் நன்றி.” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *