சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நாயகனாக நடித்து கடந்த 2019ம் ஆண்டு வெளியான ‘கண்ணே கலைமானே’ திரைப்படம் மனதைத் தொடும் வகையில் மனிதம் பேசியதற்காக பெரிதும் பாராட்டுகளை பெற்றது.
இத்திரைப்படம் தற்போது சர்வதேச அளவிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தோ-பிரெஞ்சு பன்னாட்டு திரைப்பட விழாவில் மூன்று விருதுகளை ‘கண்ணே கலைமானே’ குவித்து சாதனை படைத்துள்ளது.
சிறந்த தயாரிப்பாளருக்கான விருதை உதயநிதி ஸ்டாலினும், சிறந்த நடிகைக்கான விருதை தமன்னாவும், சிறந்த துணை நடிகைக்கான விருதை வடிவுக்கரசியும் ‘கண்ணே கலைமானே’ திரைப்படத்திற்காக இந்தோ-பிரெஞ்சு சர்வதேச பன்னாட்டு விழாவில் வென்றுள்ளனர்.
இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள இயக்குநர் சீனு ராமசாமி, “இயற்கை விவசாயிக்கும்
கைத்தறி நெசவாளர் குடும்பத்தில் இருந்து வந்த நேர்மையான வங்கி அதிகாரிக்குமான
வாழ்வியல் உண்மை பேசும் ‘கண்ணே கலைமானே’வின் திரைப்பட விழா பதிப்பை (ஃபெஸ்டிவல் வெர்ஷன்) 2019ம் ஆண்டு மத்திமத்தில் படத்தொகுப்பாளர் காசி விஸ்வநாதன் உதவியுடன் உருவாக்கியிருந்தேன். திரைப்பட விழாக்களில் பங்கு பெறும் வகையில்
1.43.08 நிமிடங்கள் ஓடக்கூடிய திரைப்படமாக யதார்த்தத்திற்கு நெருக்கமாக அனைத்து நிலையிலும் உருவாக்கியிருந்தோம்.
இரண்டு விருதுகளை கொல்கத்தா திரைப்பட விழாவில் ‘கண்ணே கலைமானே’ பெற்ற நிலையில் கொரோனா எனும் கொடிய நோய் வந்து அனைத்தையும் முடக்கிப் போட்டது. சமீபத்தில் இத்திரைப்படத்தை
பார்த்த உலக சினிமா பாஸ்கரன் உள்ளிட்ட அருமை நண்பர்கள் இதை சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு அனுப்பலாமே என்றனர்.
காலதாமமெனினும் காலஎல்லைகள் பற்றிக் கவவைப்படாத பன்னாட்டு திரைப்பட விழாக்களுக்கு மீண்டும் நம்பிக்கையோடு அனுப்பினோம். எங்கள் நம்பிக்கையை மெய்ப்பிக்கும் வகையில் இந்தோ-பிரெஞ்சு பன்னாட்டு திரைப்பட விழாவில் மூன்று விருதுகள் பெற்றது மகிழ்ச்சி,” என்று கூறினார்.
*