93 வயதில் மோகனுடன் ‘ஹரா’ படத்தில் இணையும் Ageing SuperStar சாருஹாசன்

93 வயதில் இந்திய சினிமாவில் மட்டுமல்ல உலக சினிமாவிலும் அதிரடியாக விஜய் ஶ்ரீ ஜி இயக்கத்தில் ஆக்‌ஷன் மோகனுடன் ‘ஹரா’ படத்தில் இணையும் Ageing SuperStar சாருஹாசன்

கோயம்புத்தூர் எஸ் பி மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெய ஸ்ரீ விஜய் தயாரிப்பில், ‘தாதா 87’ மற்றும் ‘பவுடர்’ படங்களை இயக்கியுள்ள விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் உருவாகும், ‘வெள்ளி விழா நாயகன்’ மோகன் முதன்மை வேடத்தில் நடிக்கும் ‘ஹரா’ படத்தில் சமூக பொறுப்பு மிக்க டானாக சாருஹாசன் நடிக்கிறார்.

93 வயதாகும் சாருஹாசன் சிறிதும் தொய்வில்லாமல் தனது காட்சிகளை சிறப்பாக நடித்து கொடுத்துள்ளதாக இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். சாருஹாசன் நாயகனாக நடித்த ‘தாதா 87’ திரைப்படத்தை சில வருடங்களுக்கு முன் விஜய் ஸ்ரீ ஜி இயக்கியது குறிப்பிடத்தக்கது.

‘ஹரா’ படத்தில் சாருஹாசனின் பங்களிப்பு குறித்து பேசிய இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி, “93 வயதில் இந்தளவு உற்சாகத்துடன் நடிக்கும் நடிகர் வேறெங்காவது இருக்க முடியுமா என்பது கேள்விக்குறி தான். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் ‘ஹரா’ படத்தில் சாருஹாசன் அவர்கள் சிறப்பாக நடித்துள்ளார்,” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “டான் என்றாலே எதிர்மறை எண்ணம் வருவது இயல்பு. ஆனால் இப்படத்தில் சமுதாயத்திற்கு நல்லது செய்யும் டான் பாத்திரத்தில் சாருஹாசன் நடித்துள்ளார். அவரது காட்சிகளை எந்த வித சோர்வோ தாமதமோ இல்லாமல் மிகுந்த உற்சாகத்துடன் நடித்து கொடுத்தார். அவருக்கும், அவரது மகள் திருமதி சுஹாசினி மணிரத்னம் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்கும் மிக்க நன்றி,” என்று கூறினார்.

மேலும், எதிர்மறை கதாப்பாத்திரத்தில் சுரேஷ் மேனனும், அதிரடி அரசியல்வாதியாகவும் அதகளம் செய்யும் அமைச்சராகவும் இதுவரை ஏற்றிராத வித்தியாச வேடத்தில் வனிதா விஜயகுமாரும் இப்படத்தில் நடிக்கின்றனர். ‘ஹரா’ திரைப்படத்தில் சுரேஷ் மேனன் மற்றும் வனிதா விஜயகுமாரின் கதாபாத்திரங்களும் நடிப்பும் பேசப்படும் என்று படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.

‘ஹரா’ திரைப்படத்தை விரைவில் திரைக்கு கொண்டு வருவதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன என்று இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி தெரிவித்தார்.

எத்தனையோ இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் முயற்சித்தும் பல வருடங்களாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த மோகன், இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜியின் கதையை பெரிதும் விரும்பி ‘ஹரா’ திரைப்படத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை மோகனை பல்வேறு கதாபாத்திரங்களில் பார்த்து ரசித்து மக்கள் கொண்டாடியது போல, ‘ஹரா’ படத்திலும் அவரது கதாபாத்திரம் மிகவும் பேசப்படும் என இயக்குநர் தெரிவித்தார்.

‘ஹரா’ திரைப்படத்தில் குஷ்பு, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், சிங்கம்புலி, தீபா, மைம் கோபி, சாம்ஸ், கௌஷிக், அனித்ரா நாயர், மற்றும் சந்தோஷ் பிரபாகர் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் நடிக்க, மிகுந்த பொருட்செலவில் இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது.

பள்ளியில் படிக்கும் போதிலிருந்தே முதலுதவி, குட் டச், பேட் டச் உள்ளிட்டவற்றை குழந்தைகளுக்கு சொல்லித் தருவது போல, ஐபிசி சட்டங்களையும் அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதே ‘ஹரா’ படத்தின் முக்கிய கருத்தாகும்.

இப்படத்தில் முதல் பார்வை, டைட்டில் டீசர் மற்றும் ‘கயா முயா…’ என்ற பாடல் உள்ளிட்டவை சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் வரவேற்பு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில், கோயம்புத்தூர் எஸ் பி மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெயஸ்ரீ விஜய் தயாரிப்பில் உருவாகும் ‘வெள்ளி விழா நாயகன்’ மோகன் நடிக்கும் ‘ஹரா’ படத்தில் 93 வயதான சாருஹாசன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *