ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் சவுத் நிறுவனங்கள், இன்வீனியோ ஆரிஜனின் அலங்கார் பாண்டியனுடன் இணைந்து தயாரிக்கும் பிரம்மாண்ட திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்
ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் சவுத் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படத்திற்காக, ‘தாமிரபரணி’ மற்றும் ‘பூஜை’ சூப்பர் ஹிட் படங்களுக்கு பிறகு நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் ஹரி ஆகியோர் மீண்டும் இணைந்துள்ளனர். இது விஷாலின் 34வது படமாகும். இன்வீனியோ ஆரிஜனின் அலங்கார் பாண்டியன் மற்றும் கல்யாண் சுப்பிரமணியம் இப்படத்தின் இணைத் தயாரிப்பாளர்கள் ஆவர்.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் இன்று தொடங்கியது. திரையுலகின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் படக் குழுவினர் இதில் பங்கேற்றனர். தேவி ஶ்ரீ பிரசாத் அதிரடி இசையில் உருவாகும் இன்னும் பெயரிடப்படாத இத்திரைப்படம் சென்னை, தமிழ்நாட்டின் தென் பகுதிகள், ஆந்திரா உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்படவுள்ளது.
ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் சவுத் நிறுவனங்கள் அலங்கார் பாண்டியன் மற்றும் கல்யாண் சுப்பிரமணியம் உடன் இணைந்து இத்திரைப்படத்தை பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்கின்றன.
குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய விறுவிறுப்பான திரைப்படங்களை தொடர்ந்து உருவாக்கி வரும் இயக்குநர் ஹரியும், ஆக்ஷன் படங்களில் தனக்கென தனி முத்திரை பதித்து வரும் நடிகர் விஷாலும் ‘தாமிரபரணி’ மற்றும் ‘பூஜை’ வெற்றிப் படங்களுக்கு பிறகு இணையும் இப்படத்தில் முன்னணி நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்ற உள்ளனர்.
இப்படத்தை தயாரிப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம், “விஷால் மற்றும் ஹரி உடனான இந்த திரைப்படம் அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் திருப்திப்படுத்தும் என்று நான் நம்புகிறேன். இந்த வெற்றி கூட்டணியுடன் இணைவதில் மிக்க மகிழ்ச்சி,” என்றார்.
இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவை எம். சுகுமார் கவனிக்க, படத்தொகுப்பை டி.எஸ். ஜெய் கையாள்கிறார். கலைக்கு காளி. பிரேம்குமாரும் சண்டை பயிற்சிக்கு திலீப் சுப்பராயனும் பாடல்களுக்கு கவிஞர் விவேகாவும் பொறுப்பேற்றுள்ளனர்.
விறுவிறுப்பான கதைக்களம் மற்றும் வேகமான திரைக்கதை கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கி பல்வேறு இடங்களில் தொடர்ந்து நடைபெற உள்ளது. கதாநாயகி உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ள நடிகர்களின் பெயர்கள் விரைவில் வெளியிடப்படும்.