“மொழியை ரொம்ப டீப்பா எடுத்துக்கிட்டு நாம சண்டை போட்டுக்க வேண்டியதில்லை” ; கைமேரா பட இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேச்சு
“நூறு கோடிக்கு மேல் சம்பளம் வாங்க ஆரம்பித்ததும் கதை கேக்குறதையே விட்டுட்டாங்க” ; கைமேரா பட இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் ஆதங்கம்
“எங்களுக்கு மொழி ஒரு பிரச்சனை இல்லை. திறமையை தான் பார்ப்போம்” ; கைமேரா பட இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் பேரரசு ஓபன் டாக்
“சினிமாக்காரர்கள் தவறு செய்தால் தேசத்துரோகி போல காட்டி விடுவார்கள்” ; கைமேரா பட இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் பேரரசு எச்சரிக்கை
தமிழ் தெலுங்கு ஹிந்தி என மூன்று மொழிகளில் நேரடியாக எடுக்கப்பட்ட படம் தான் ; பான் இந்திய ரிலீஸாக வெளியாகும் கைமேரா படத்தின் இயக்குநர் உறுதி
“படத்தின் காட்சிகள் பயமுறுத்தும் விதமாக, பணியாற்றுவதற்கு சவாலாக இருந்தன” ; கைமேரா பட இசையமைப்பாளர் விக்னேஷ் ராஜா
“செல்வாக்கு உள்ளவர்களாக இருந்தால் திறமை இல்லாதவர்களுக்கு கூட வாய்ப்பு கிடைக்கிறது” ; கைமேரா பட நாயகி சௌமியா அதிரடி பேச்சு
பரமு, செல்பிஷ் படங்களை இயக்கிய மாணிக் ஜெய்.N இயக்கத்தில் மூன்றாவதாக உருவாகியுள்ள படம் ‘கைமேரா’. ‘வச்சுக்கவா’ படத்தில் கதாநாயகனாக நடித்த இவர் ‘பரமு’ என்கிற படத்தின் மூலம் இயக்குனராக மாறினார். தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு ஹிந்தி மொழியில் உருவாகி வரும் செல்பிஷ் என்கிற படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்தநிலையில் தற்போது கைமேரா என்கிற படத்தையும் இயக்கி முடித்துள்ளார் மாணிக் ஜெய்.
இத்திரைப்படத்தில் அறிமுக நாயகனாக LNT எத்திஷ் நடிக்கிறார்.. மாறுபட்ட வேடங்களில் தாரை கிருஷ்ணன், ரஞ்சித் குமார் மற்றும் இன்னொரு முக்கியமான கதாபாத்திரத்தில் இயக்குனர் மாணிக் ஜெய் நடித்துள்ளனர்.. கதையின் நாயகிகளாக சௌமியா, கிருஷ்ண நந்து, ஞானேஸ்வரி உள்ளிட்ட மூன்று பேர் நடித்திருக்கின்றனர்..
மனித உடம்புக்குள் மிருகங்களின் செல்கள் புகுத்தப்பட்டால், மனிதனின் குணம் மிருக குணமாக மாறினல் அதன் தாக்கம் எப்படி இருக்கும் என்பதை மையமாக வைத்து இந்தப்படம் உருவாகியுள்ளது. பான் இந்தியா படமாக உருவாயுள்ள ‘கைமேரா’ விரைவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்று ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது.
விக்னேஷ் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் சங்க தலைவர் ஆர்.வி.உதயகுமார், இயக்குநர்கள் சங்க பொதுச்செயலாளர் பேரரசு, இயக்குநர் மீரா கதிரவன் மற்றும் நடிகை கோமல் சர்மா ஆகியோர் கலந்துகொண்டு இசைத்தட்டை வெளியிட்டனர்..
இந்த நிகழ்வில்
தயாரிப்பாளரும் இயக்குநருமான மாணிக் ஜெய் பேசும்போது,
“இதில் நடித்துள்ள LNT எத்திஷ் என்னுடன் செல்பிஷ் படத்தில் நடித்தவர். இந்த படம் உருவாவதற்கு காரணம் விஎப்எக்ஸ் ரோஹித் தான். செல்பிஷ் படம் எடிட்டிங்கில் கொஞ்சம் தாமதமாகும் என அவர் கூறியபோது அந்த நேரத்தில் உருவான கதை தான் இது. அந்த சமயத்தில் நானே நடிக்கிறேன் என எத்திஷ் கூறினார். உங்களுடைய உண்மையான குணாதிசயத்திற்கு நேர்மாறான கதாபாத்திரம் என்று கூறினேன். நான் நினைத்ததை விட நன்றாக நடித்திருக்கிறார். சௌமியா கிருஷ்ணா நந்து இருவருமே போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். ரஞ்சித் என்னுடன் முதல் படத்திலிருந்து பயணித்து வருகிறார். அவரும் இந்த படத்திற்கு ரிகர்சல் இல்லாமலேயே மிகச்சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். இந்த படம் தமிழ் மற்றும் தெலுகு ஹிந்தி மொழிகளில் நேரடியாக எடுக்கப்பட்டது தான், சில நடிகர்கள் மட்டுமே பெங்களூரில் இருந்து இதில் நடித்திருக்கிறார்கள்” என்று கூறினார். படத்தில் ஐந்து பாடல்கள் ஒன்று மோகன் ராஜன் எழுத மற்ற நான்கு பாடல்கள் கவிதார்கோ எழுதியுள்ளார்.
இசையமைப்பாளர் விக்னேஷ் ராஜா பேசும்போது,
“இந்த படத்தில் ஐந்து பாடல்கள் இடம் பெற்றுள்ளன. படம் ஒரு சயின்ஸ் திரில்லர் ஆக உருவாகி இருக்கிறது. படத்திற்காக எடுக்கப்பட்ட காட்சிகள் அனைத்துமே பயமுறுத்தும் விதமாக, பணியாற்றுவதற்கு சவாலாக இருந்தன” என்று பேசினார்.
விஎப்எக்ஸ் பணிகளை மேற்கொண்ட ரோஹித் பேசும்போது,
இயல்பாகவே ஒரு சில மனிதர்களுக்கு கொஞ்சம் மிருக குணம் இருக்கும். இந்த மிருக குணம் அதீத அளவிற்கு செல்லும்போது மற்ற மனிதர்களுக்கும் இந்த சமுதாயத்திற்கும் எந்தவித தாக்கத்தை கொடுக்கும் என்றும் அது அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் இயக்குநர் மாணிக் ஜெய் அழகாக கூறியுள்ளார். இன்றைய சூழலில் ஒரு சில பெண்கள் போதை பொருளுக்கு அடிமையாகின்றனர். ஆண்களும் பெண்களும் சமம் தான் என்றாலும் கூட, சிலர் இப்படி மது அருந்துவது, போதைப்பொருள் பயன்படுத்துவது என ஆண்களுக்கு இணையாக போட்டி போட ஆரம்பித்து விட்டார்கள், அப்படி போட்டி போடும் இரு தரப்பினருக்குமே மனம் பற்றிய புரிதல் இல்லாதது தான் காரணம். மனம் என்பது நமது அடிமையாக இருக்கும் வரை நாம் ராஜாவாக இருக்கலாம். தூண்டிலை நோக்கி செல்லும் மீன், விளக்கை நோக்கி செல்லும் விட்டில் பூச்சி போன்ற ஓரறிவு கொண்ட உயிரினங்களுக்கே அந்த கதி என்றால் ஐம்புலன்களை கொண்ட மனிதர்கள் உஷாராக இருக்க வேண்டும்” இன்று கூறினார்.
நடிகர் தாரை கிருஷ்ணன் பேசும்போது,
“மாணிக் ஜெய்யின் பரமு படத்தில் நடித்திருந்தேன். இந்த படத்தில் வாய்ப்பு இருக்கிறதா என்று கேட்டபோது, அடுத்த படத்தில் தருகிறேன் இதில் கொஞ்சம் கஷ்டமான கதாபாத்திரம் தான் இருக்கிறது என்றார். இருந்தாலும் படப்பிடிப்புக்கு வாருங்கள் பார்க்கலாம் என்றும் கூறினார். ஆனால் படப்பிடிப்பிற்கு சென்ற முதல் நாளே என்னை ஜட்டியுடன் நிற்க வைத்து விட்டார். இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி”
என கூறினார்.
நாயகி சௌமியா பேசும்போது,
“இயக்குநர் மாணிக் ஜெய்யை எனக்கு 13 வருடங்களாக தெரியும். கடின உழைப்பாளி. இப்போது உள்ள தலைமுறைகளிடம் என்ன இல்லை. வரப்போகும் தலைமுறையினருக்கு என்ன தேவை என்பது பற்றி எல்லாம் யோசித்துக் கொண்டே இருப்பார். எனக்குள் இருக்கும் திறமையை கண்டுபிடித்து எனக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்த இயக்குனருக்கு நன்றி. மனிதர்களுக்குல் மிருக குணம் ஒளிந்திருக்கும். அதை மறைத்து பெரும்பாலும் நடிப்பார்கள். சில நேரங்களில் அவர்களை அறியாமல் அது வெளிப்பட்டு விடும். அதை இயக்குநர் தெளிவாக புரிய வைத்திருக்கிறார். இந்த படத்தின் ஹீரோ நல்ல நடிப்பு திறமை உள்ளவர். ஆனால் அவருக்கு ஏன் வாய்ப்புகள் வரவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால் பணம், செல்வாக்கு உள்ளவர்களாக இருந்தால் திறமை இல்லாதவர்களுக்கு கூட வாய்ப்பு கிடைக்கிறது” என்றார்.
கவி கார்கோ பேசும்போது,
இந்த படத்தில் நான்கு பாடல்களை எழுதி இருக்கிறேன். அதில் இடம்பெறும் இரண்டு பயண பாடல்களை என் வாழ்க்கை, என் தனிமை அந்த அனுபவங்களில் இருந்து எழுதியிருக்கிறேன்” என்று பேசினார்.
நாயகன் LNT எத்திஷ் பேசும்போது,
“இதில் என்னுடைய கதாபாத்திரம் எனக்குள் ஏதோ ஒன்றை கொடுத்தது. இந்த படம் நன்றாக வந்துள்ளது. சமீபத்தில் இங்கே வந்த சிவராஜ்குமார் சிறப்பாக தமிழில் பேசினார். நிச்சயமாக நான் அடுத்த படத்தில இதே போன்ற நிகழ்ச்சியில் பேசும்போது தமிழில் பேசுவேன்” என்று உறுதி அளித்தார்.
இயக்குநர் மீரா கதிரவன் பேசும்போது,
“தமிழ் சினிமாவில் எப்போதுமே திறமையானவர்களுக்கு இடம் உண்டு. அது கொஞ்சம் தாமதமாகும். அதற்காக வருத்தப்பட வேண்டாம். அதற்கு இயக்குனர்கள் ஆர்வி உதயகுமார், பேரரசு போல நிறைய பேர் உதாரணமாக இருக்கிறார்கள்” என்று கூறினார்.
இயக்குநர் பேரரசு பேசும்போது,
“படத்தின் ஹீரோவுக்கு கன்னடத்தில் பேசுவதா, தமிழில் பேசுவதா, கன்னடம் பேசினால் தப்பாக போய்விடுமா என கொஞ்சம் குழப்பம் இருந்ததை பார்க்க முடிந்தது. தமிழ்நாட்டில் நீங்கள் எதை வந்து பேசினாலும் நாங்கள் ஏற்றுக் கொள்வோம். எங்களுக்கு மொழி ஒரு பிரச்சனை இல்லை. திறமையை தான் பார்ப்போம்.. ரஜினிகாந்தை பிடித்து போனால் சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுத்து கொண்டாடுவோம். தன்னடத்து பைங்கிளி என சரோஜாதேவியை கொண்டாடுவோம். ஆனால் இங்கிருந்து ஒரு தமிழ் நடிகையை அனுப்புகிறோம், அங்கே யாராவது தமிழ் பைங்கிளி என்று கூறுவார்களா ?
உலகத்தின் முதல் மொழி தமிழ் தான். அதிலிருந்து தான் தெலுங்கு போனது. மலையாளம் உருவானது. இதிலிருந்து தான் கன்னடம் உருவானது என்று சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். இதை நாங்கள் நம்புகிறோம். கன்னடம் வேறு, தமிழ் வேறு என்றால் ஓகே. நாங்கள் எந்த விவாதமும் பண்ண மாட்டோம். தமிழ் மண்ணில் மொழிக்கும் கலைக்கும் சம்பந்தமில்லை. ஒரு டிரைலரிலேயே த்ரில்லரை கொண்டு வருவது பெரிய விஷயம். ஆனால் அதை பார்க்கும்போது ஒரு குழப்பத்தையும் உருவாக்கியது. காரணம் இங்கே 90 சதவீதம் பேர் மிருகமாகத்தான் இருக்கிறோம். அன்று சாத்தான்குளம், இன்று திருப்புவனம்.. விசாரணை எதுவும் இல்லாமல் ஒரு ஆளை அடித்து கொன்று உள்ளார்கள். அவர்கள் எப்படி மனிதர்களாக இருக்க முடியும் ? அவர்கள் மிருகங்கள்தான். நாட்டில் பெரும்பாலானவர்களிடம் மிருகத்தன்மை தான் அதிகமாக இருக்கிறது. மனித தன்மை குறைந்துவிட்டது.
இன்று போதைப் போல் கலாச்சாரம் அதிகமாகி விட்டது சினிமாக்காரர்கள் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும். நாட்டில் யாராவது தண்ணி அடித்து விட்டு விழுந்து கிடந்தால் அது சாதாரண விஷயம். ஒரு சினிமாக்காரர் அப்படி இருந்தால் அங்கு ஒரு தேசிய பிரச்சினையாக மாறிவிடும். நடிகர் ஸ்ரீகாந்த் போதை பொருள் பயன்படுத்தியதாக கைதாகி இருக்கிறார். அந்த பழக்கத்தில் இருந்தது தவறுதான். கைதானதும் சரியான விஷயம் தான். ஆனால் அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு பெண்ணை வன்கொடுமை செய்த நபரின் முகத்தை யாருக்காவது காட்டினார்களா ? திருப்புவனம் காவல் நிலைய சம்பவத்தில் ஈடுபட்ட அந்த குற்றவாளி காவலர்களின் முகத்தை எங்கேயாவது காட்டி இருக்கிறார்களா ? யாருக்காவது ஞாபகம் இருக்கிறதா ? ஆனால் ஒரு நடிகரை தீவிரவாதியை போல சித்தரிப்பது தான் ஆச்சரியமாக இருக்கிறது. கோடிக்கணக்கில் போதை பொருளை விற்றவன் புகைப்படம் கூட இப்படி வந்ததில்லை. அதனால் சினிமாக்காரர்கள் இப்படி நாம் ஒரு தவறு செய்தால் நம்மை ஒரு தேசத்துரோகிகள் போல இந்த உலகத்தில் காட்டி விடுவார்கள் என்பதை உணர்ந்து உஷாராக இருக்க வேண்டும். ஆனால் தேசத்துரோகம் பண்ணியவர்களை அப்படி காட்ட மாட்டார்கள்.
சமூக வலைதளங்களில் கூட வன்மத்தை கக்கும் நிறைய மிருகங்கள் இருக்கின்றார்கள். ஒரு படத்தை பார்க்காமலேயே விமர்சனம் செய்து அதை காலி செய்கிறார்கள். அப்படி ஒரு நோய் இப்போது வந்திருக்கிறது. இவர்களுக்கு பிடிக்கவில்லை என்றால் மக்களுக்கே பிடிக்கவில்லை என்பது போல, அந்த படத்தை காலி பண்ணி விடுகிறார்கள். தமிழ் சினிமாவில் இந்த கைமேரா படத்தின் கதையம்சம் போல வந்தது இல்லை. இயக்குநர் மாணிக் ஜெய்யின் இந்த புதிய முயற்சி வெற்றி அடைய வேண்டும்” என்று பேசினார்.
இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசும்போது,
“நான் ஜெமினி ஸ்டுடியோவில் வேலை செஞ்சுட்டு இருக்கும்போது கன்னட திரையுலகின் ஐம்பதாவது ஆண்டுவிழா. நடைபெற்றபோது என்னையும், என்னுடைய நண்பர் இயக்குனர் ராஜா ரவியையும் அனுப்பி வெச்சாங்க.. அந்த நிகழ்வில் ராஜ்குமார் சார் வர்றாரு. அப்போதைய முதல்வர், ராமகிருஷ்ண ஹெக்டே, சௌகார் ஜானகி அம்மா. வாணிஸ்ரீ, ஆர்த்தி, விஷ்ணுவர்தன், அதோட சேர்த்து நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எல்லாரும் மேடையில இருக்காங்க. அங்க இந்த மொழி பிரச்சனை வரும்போது எப்படி அத கையான்டாங்க அப்படின்னு நான் என் கண்ணால் பாத்தேன். சௌகார் ஜானகி அழகா கன்னடத்துல ஆரம்பிச்சு தமிழ்ல பேச ஆரம்பிச்சாங்க.. உடனே. கன்னடத்தில் பேசுங்க என கீழே இருந்து ஒரு சவுண்ட் விட்டாங்க. அவங்க பேச்சை நிறுத்திட்டாங்க. அதுக்கு முன்னாடி. சரோஜா தேவி பேசி முடிக்கும்போது எனக்கு அதிக வாய்ப்பு கொடுத்தது எனக்கு தமிழ் சினிமா தான் அப்படின்னு சொன்னாங்க. திரும்பவும் சத்தம் போடா ஆரம்பிச்சுட்டாங்க.. இது வந்து மொழியை எதற்கு பயன்படுத்துறோம். எந்த உணர்வை தூண்டுவதற்கும் மொழியை பயன்படுத்துகிறோம் என்பது தான்… அந்த இடத்துல பெரிய ரகளை ஆயிடுச்சி. அந்த உணர்வை தூண்டி விட்டுட்டாங்க ஜனங்க. அதன்பிறகு. ராஜ்குமார் சார் வந்து எல்லோரையும் அமைதிப்படுத்தினார்.
எனக்கு உங்களுக்கு ரஜினி சார். நிறைய பேருக்கு ரஜினி சார பிடிக்கும். சில பேருக்கு புடிக்காது. என்னை வியக்க வைத்த ஒரு மனிதர் அவர்.. அப்போ நான் பெரிய ரஜினி சார் ரசிகர் இல்ல. ஆனா அந்த நிகழ்வுல. ரஜினி சார் அன்னைக்கு பேசின ஒரு பேச்சு இருக்கு பாருங்க.. அற்புதமான பேச்சு.. அதை அவரே ஞாபகம் வச்சுருக்காரான்னு தெரியாது எனக்கு.. அப்போ. கன்னடத்துல பேசுனாரு.. கன்னடத்துல பேசும்போது அவர், இது தவறு. இதோ.. ராஜ்குமார் நான் நடிக ஆசைப்பட்ட சமயத்தில் என்னை கூப்பிட்டு டேய் நீ எல்லாம் கருப்பா இருக்க. நீயெல்லாம் நடிக்கும் நடிகனாக முடியாது. போடா வேற எதாச்சும் வேலைய பாரு என்று துரத்திவிட்டார்.. ஆனா என்னை கூப்பிட்டு நடிக்க வச்ச ஒரே ஆளு பாலச்சந்தர் சார் தான்.. அப்படின்னு சொன்னதும் எல்லாம் அமைதியா. ஆயிட்டாங்க. மொழி என்பது. நம்ம நினைக்கிறதை அடுத்தவங்களுக்கு சொல்ற ஒரு கருவி தான்னு சொன்னார்..
மொழியை ரொம்ப டீப்பா எடுத்துக்கிட்டு நாம சண்டை போட்டுக்க வேண்டியதில்லை. மொழியை மீறின ஒரு உணர்வுதான் கலை. இந்த கலைக்கு அதுவும் குறிப்பாக திரைப்படக் கலைக்கு மொழி வந்து ஒரு இடைஞ்சலாகவோ, ஒரு தடங்கலாகவோ, ஒரு பிரச்சனையாகவோ இருக்கக்கூடாது..தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், நான்கு மொழிப் படங்களும் எடுத்த ஊர் தான் இந்த சென்னை.. சினிமா துறையை பொறுத்தவரையிலும் ஒரு செட்டுல கன்னடத்துல பேசுவாங்க. அதே செட்டு காலியாகவும். அதுக்குள்ள தமிழ் நடிகர்கள் போய் அதே படத்துல நடிப்பாங்க. இங்க ராமராவ் அங்க எம்ஜியாரு, இந்த பக்கம் சிவாஜி சார், இந்த பக்கம் ராஜ்குமார், அந்தபக்கம் விஷ்ணுவர்தன். எல்லாரும் ஒன்னா கூடி கும்மி அடிச்சு எவ்வளவு அழகா இருந்த நம்ம சினிமா இன்னிக்கு ஒரு கேரவனுக்குள்ள போய் ஒழிஞ்சிடுச்சு. ஒரு கேரவனோட. மொதல்ல அதுல இருந்து மீட்டெடுப்போம். கேரவனுக்குள் இருந்து இந்த சினிமாவை மீட்டெடுத்தாலே நமக்கு பெரிய சக்சஸ் வந்துரும்.
பெரும்பாலும் இன்னைக்கு பெரிய பெரிய ஹீரோக்களுக்கே அவங்க கதையை கேட்டதாக தெரியல. எங்களை எல்லாம் டார்ச்சர் பண்ணி என்ன கதை கரெக்டா சொல்லுங்க அப்படின்னு கேட்டுட்டு இருந்தாங்க. ஒரு நூறு கோடிக்கு மேல் சம்பளம் வாங்க ஆரம்பிச்சவுடனே கதை கேக்குறதையே விட்டுட்டாங்க” என்றார்.
தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்
தயாரிப்பு ; ஜெய் ருத்ரா பிக்சர்ஸ் / மாணிக் ஜெய்.N
இயக்கம் ; மாணிக் ஜெய், N
ஒளிப்பதிவு ; வினோத்
படத்தொகுப்பு ; நவீன்
இசை ; விக்னேஷ்ராஜா
ஸ்டண்ட் ; synt சூரி
மக்கள் தொடர்பு ; A.ஜான்