Kaantha புதிய படத்தில் இணையும் ராணா – துல்கர் சல்மான்
ராணா டகுபதி, துல்கர் சல்மான் இணைந்து தயாரிக்கும் Kaantha என்ற புதிய படத்தை இயக்குனர் செல்வமனி செல்வராஜ் இயக்குகிறார். ஸ்பிரிட் மீடியா மற்றும் வேஃபாரெர் ஃபிலிம்ஸ் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளன.
தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகன் ராணா மற்றும் தெலுங்கு மொழியில் அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்த மலையாள சூப்பர்ஸ்டார் துல்கர் சல்மான் புதிய படத்திற்காக இணைந்துள்ளனர். பல மொழிகளில் உருவாகும் இந்த படத்தை ராணாவின் ஸ்பிரிட் மீடியா மற்றும் துல்கர் சல்மானின் வேஃபாரர் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கின்றன.
மலையாளம் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி கதாநாயகர்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தின் தலைப்பு, துல்கர் சல்மானின் பிறந்தநாளை ஒட்டி புதிய போஸ்டர் மூலம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. படத்தை இணைந்து தயாரிப்பதுடன் துல்கர் சல்மான் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்த படத்தில் இணைவதில் ராணா மிகவும் சுவாரஸ்யம் அடைந்துள்ளார். இதன் மூலம் மக்களுக்கு முற்றிலும் புதிய அனுபவத்தை வழங்க முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது குறித்து ராணா வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருப்பதாவது..,
“நல்ல சினிமாவின் சக்தியை நினைவூட்டும் வகையில், மிகவும் சிறப்பான கதையை கண்டறிவது மிகவும் அரிதான காரியம் ஆகும். காந்தா அதுபோன்ற ஒரு கதை தான். இதுவே எங்களை இணைய செய்திருக்கிறது. இந்த பயணத்தை துவங்குவதில் மிகவும் ஆர்வமாக இருக்கிறோம். மிகவும் திறமை மிக்க துல்கர் சல்மான் மற்றும் வேஃபாரெர் ஃபிலிம்ஸ் உடன் இணைவது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. அவரது பிறந்தநாளை ஒட்டி, என்ன நடக்க போகிறது என்பதற்கான சிறு முன்னோட்டம். பிறந்தநாள் வாழ்த்துக்கள் துல்கர் சல்மான், காந்தா உலகிற்கு வரவேற்கிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.
இந்த படத்தின் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப குழு பற்றிய விவரங்களை பின்னர் அறிவிப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.