நடிகர் சித்தார்த்தா சங்கர்
ஒரு கலைஞனுக்கான உற்சாகம் என்பது விமர்சகர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்களின் ஆத்மார்த்தமான பாராட்டுக்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. குறிப்பாக, திரைத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற கனவுகள் கொண்ட சித்தார்த்தா ஷங்கர் போன்ற நடிகருக்கு இத்தகைய பாராட்டுகள் விலைமதிப்பற்ற பரிசு. ‘சைத்தான்’ மற்றும் ’ஐங்கரன்’ போன்ற படங்களில் தனது நடிப்பு திறமைக்காக பலரது பாராட்டுகளைப் பெற்ற இவர், இப்போது சமீபத்தில் வெளியான விஜய் ஆண்டனியின் ‘கொலை’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது சிறந்த நடிப்பிற்காக இந்த முறையும் பாராட்டுகளைப் பெற்று வருகிறார். குறிப்பாக, படத்தில் அவரது சரியான உடல் மொழி, உணர்வுகளின் வெளிப்பாடு மற்றும் தமிழில் மொழியில் அவரது திறமை போன்றவையும் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது
மகிழ்ச்சியான உணர்ச்சிகளால் நிரம்பியுள்ள நடிகர் சித்தார்த்தா ஷங்கர் பேசும்போது, “தன்னுடைய ரசிகர்களிடம் இருந்து நிபந்தனையற்ற அன்பும் ஆதரவுமே ஒவ்வொரு நடிகரும் எதிர்பார்க்கிறார்கள். அந்த அன்பை ‘கொலை’ படத்தில் என்னுடைய நடிப்பிற்காக கொடுத்ததற்கு நன்றி. எனது திறனை நிலைநிறுத்திக் கொள்ள இந்தப் படம் எனக்கு மகத்தான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இந்த வாய்ப்பை வழங்கிய விஜய் ஆண்டனி சார், இயக்குநர் பாலாஜி கே குமார், இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் தயாரிப்பாளர்கள் மற்றும் ஒட்டுமொத்த குழுவிற்கும் நன்றி. இந்தப் படத்தில் எனது நடிப்பை குறிப்பிட்டு பாராட்டிய விமர்சகர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் நன்றி. இத்தகைய பாராட்டும் ஆதரவுமே நான் அடுத்து தேர்ந்தெடுக்கும் படங்களில் இன்னும் சிறந்த நடிப்பைத் தரக்கூடிய பொறுப்பைக் கொடுத்துள்ளது” என்றார்.